ரூ.1000-க்கு பதிலாக ரூ.3,000 வழங்கிய ஏடிஎம் இயந்திரம்: குடியாத்தத்தில் சலசலப்பு

குடியாத்தம் ஏடிஎம் மையத்தில் வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆய்வு நடத்தி ஏடிஎம் மையத்தை தற்காலிகமாக மூடினர்.
குடியாத்தம் ஏடிஎம் மையத்தில் வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆய்வு நடத்தி ஏடிஎம் மையத்தை தற்காலிகமாக மூடினர்.
Updated on
1 min read

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் அமைந் துள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.1000 பணம் எடுக்க வந்தவர்களுக்கு ரூ.3,000 கிடைத்ததால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்டுச் சாலை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள இயந்திரத்தில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 பணம் எடுத்தபோது ரூ.3000 கிடைத்துள்ளது.

இதனை அறிந்த பொதுமக்கள் பலர் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து சென்று ஏ.டி.எம் இயந்திரத்தை சோதனை செய்து விட்டு உடனடியாக அந்த ஏ.டி.எம் மையத்தை தற்காலிகமாக மூடினர்.

மேலும், அங்கு கூடிய கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, "தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது. அதாவது, ரூ.1000 வேண்டும் என்றால் ஒரு 500 ரூபாய் நோட்டு, நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து என்ற வீதத்தில் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், தவறுதலாக ஆறு நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு கூடுதல் பணம் எடுத்து சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in