

தருமபுரி: தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை பகுதியில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாலையில் ஆய்வு செய்தார்.
நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ள பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அமைந்துள்ள பகுதி வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சிப்காட் வளாகத்திற்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைக்குள் சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை தொட்டு தடங்கம் மேம்பாலம் வரை சென்று அங்கிருந்து அதியமான் கோட்டை பழைய புறவழிச்சாலை வழியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் வரை எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான பாதுகாப்பான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'நடப்போம் நலம் பெறுவோம்' எனும் நோக்கில் இப்பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு தங்கள் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வசதியாக இப்பகுதி நடை பயிற்சிக்காக மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இப்பகுதியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூலை 9)அதிகாலை நேரில் ஆய்வு செய்தார். அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் நடை பயிற்சியை தொடங்கிய அமைச்சர் எட்டு கிலோமீட்டர் தொலைவு நடைபயிற்சி மேற்கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பகுதி வரை நடைபயிற்சி முடித்து இப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக நடை பயிற்சி மேற்கொள்ள பொருத்தமான இடமா என்பதை அமைச்சர் ஆய்வு செய்தார்.மேலும் இப்பகுதி குறித்து பல்வேறு விவரங்களையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் சாந்தி, காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவல்லி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.