Published : 09 Jul 2023 07:12 AM
Last Updated : 09 Jul 2023 07:12 AM

தமிழகத்தில் மாபெரும் வேளாண் புரட்சி - வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கினார். உடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அலுவலர்கள்.

சென்னை: திமுக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தில் மாபெரும் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா நேற்று தொடங்கியது. இங்கு 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட் களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட தின்பண்டங்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகம் குறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. வாங்குபவர்- விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

11 சதவீதம் வளர்ச்சி: வேளாண் துறையை முதன்மையானதாகப் பார்ப்பதாலேயே இதில் வளர்ச்சியை எட்ட முடிந்தது. குறிப்பாக முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாக, அதாவது 120 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் நாளே மேட்டூர் அணையை திறந்தது மிகப்பெரிய சாதனை. இந்தப் பகுதியில் கால்வாய், ஆறுகளைத் தூர்வார முன்னுரிமை அளித்தது போன்றவற்றாலேயே தமிழகத்தில் மாபெரும் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏற்படுத்திய உழவர் சந்தைகளை, அடுத்த ஆட்சியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தியிருந்தால் விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். தற்போது திமுக அரசு அமைந்ததும் 100 உழவர் சந்தைகளை புத்தொளி பெற வைத்தோம். 10 உழவர் சந்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

வேளாண்துறையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கியிருப்பது மிகப்பெரிய முன்னெடுப்பு. அடுத்து வேளாண் ஏற்றுமதிகளை அதிகப்படுத்த மின்னணுமயமாக்கல் நடைபெறுகிறது. மேலும் பல திட்டங்களைஅறிமுகப்படுத்த இருக்கிறோம். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு தொழில்நுட்பமும், அதிகாரிகளுக்கு விவசாயமும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும்.

விவசாயிகளின் நண்பன்: விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, அவர்களை மாதக் கணக்கில், தகிக்கும் வெயிலிலும், நடுங்கும் குளிரிலும் தலைநகரில் போராட வைத்தது விவசாய விரோத பாஜக அரசு. ஆனால் திமுக அரசு எப்போதும் விவசாயிகளின் நண்பனாக இருக்கும்.

அதனால்தான் 2006-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், ஒரே கையெழுத்தில் ரூ.7 ஆயிரம் கோடி வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் வழியில் ஆட்சிக்குவந்து ஒன்றரை ஆண்டுகளில் திமுகஅரசும் ஒன்றரை லட்சத்துக்கும்அதிகமான இலவச மின் இணைப்புகளை வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம், வேளாண் துறைச்செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x