தமிழகம் முழுவதும் நிலஆர்ஜிதம் தொடர்பான லோக்-அதாலத்: ரூ.111 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

தமிழகம் முழுவதும் நிலஆர்ஜிதம் தொடர்பான லோக்-அதாலத்: ரூ.111 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற நில ஆர்ஜிதம் தொடர்பான சிறப்பு வழக்குகளுக்காக நடத்தப்பட்ட லோக்-அதாலத்தில் 3 ஆயிரத்து 536 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.111.14 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்தநீதிபதியும், மாநில சட்டப்பணிகள்ஆணைக்குழு செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் ஆகியோரது அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் நேற்று நில ஆர்ஜிதம் தொடர்பான சிறப்பு வழக்குகளுக்காக லோக்-அதாலத் நடத்தப்பட்டது.

7 அமர்வுகள்: அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் நீதிபதிகள் முகமது ஷபீக், ஜெ.சத்ய நாராயண பிரசாத், வி.லட்சுமி நாராயணன், கே.ராஜசேகர் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் 5 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், பி.தனபால் ஆகியோரது தலைமையில் 2 அமர்வுகளும் அமைக்கப் பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதேபோல தமிழகம் முழுவதும் 154 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நில ஆர்ஜிதம் தொடர்பான 3 ஆயிரத்து 536 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 111.34 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர்மற்றும் மாவட்ட நீதிபதியுமான கே.சுதா ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in