

சென்னை: வேளாண் பொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பை நீக்க வேண்டும் என வேளாண்மை துறை செயலர் சி.சமய மூர்த்தியிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா நேற்று கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை துறையின் செயலரிடம் அவர் அளித்த மனுவில், “அண்டை மாநிலங் களில் ஏற்கெனவே செஸ் வரி விதிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு, மீண்டும் தமிழகத்தில் செஸ் வரி விதிப்பு என்பது விலைவாசி உயர்வுக்கே வழிவகுக்கும். எனவே இச்சட்டத்தில் ‘இன் ஆல் பார்ம்ஸ்’ என்னும் வாசகத்தை நீக்குவதோடு, செஸ் வரி விதிப்பை முழுவதுமாக நீக்க வேண்டும்.
இதன் மூலம் மொத்த வணிகர்களையும், பல்வேறு வணிகப் பயன்பாட்டுக்கு மதிப்புக் கூடுதல் செய்து வணிகம் செய்பவர்களையும், நுகர்வோர்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகத்தில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக பொறுப் பேற்றுள்ள சங்கர் ஜிவாலை, பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் பேரமைப்பின் மாநிலப் பொருளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, செயலர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலர் வி.பி.மணி உடன் இருந்தனர்.