Published : 09 Jul 2023 04:07 AM
Last Updated : 09 Jul 2023 04:07 AM
காட்டாங்கொளத்தூர்: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்) 19-வது பட்டமளிப்பு விழா நேற்று எஸ்.ஆர்.எம் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர்கள் முனைவர் ரவி பச்சமுத்து, முனைவர் பி. சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச் செல்வன் வரவேற்று நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
பட்டமளிப்பு விழாவுக்கு எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரி வேந்தர் தலைமை வகித்து பேசியதாவது: எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பொறியியல், தொழில் நுட்பம், மருத்துவம், சட்ட கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை கொண்ட நிறுவனமாக உள்ளதுடன் இங்கிருந்து பட்டம் பெற்று சென்றவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
உலக தரத்துடன் கல்வி வழங்குவது மட்டுமின்றி வேலை வாய்ப்பு பெற்று தருவதிலும் முன்னணியில் உள்ளது. கடந்தாண்டு இங்கு பயின்ற 12 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுக்கு ரூ.1 கோடி அளவுக்கு ஊதியமும் பெறுகின்றனர். பட்டம் பெற்று செல்லும் நீங்கள் உங்கள் பெற்றோரை கவனித்து கொள்ள வேண்டும்.சமுதாய வளர்ச்சிக்கும், புத்தொழில் தொடங்கி நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 143 மாணவர்களுக்கு பி.எச்டி பட்டங்கள் உட்பட 7,683 பேருக்கு பட்டங்கள் வழங்கியும், தேர்வில் சிறப்பிடம் பெற்ற 103 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பேசியதாவது:
விடா முயற்சி வேண்டும்: பட்டம் பெற்று செல்லும் உங்களுக்கு உலகில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதோடு சவால்களும் உள்ளன. உங்களுடைய கவனம் கூர்மையான சிந்தனை, தெளிவான பார்வை, விடாமுயற்சி கொண்டதாக இருக்க வேண்டும் அது உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். நமது நாடு 10 ஆண்டுகளுக்கு முன்பை விட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.
நாட்டில் கட்டமைப்பு வசதி, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, தொலைத் தொடர்பு துறை,துறைமுகம் உள்ளிட்ட துறைகள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. எஸ்ஆர்எம் நிறுவனத்தில் மாணவர்கள், தொழில் நிறுவனங்களின் பயனுக்காக ஏராளமான ஆய்வகங்கள், பெட்டகங்கள் அமைந்துள்ளன.
அதேபோன்று 5ஜி சேவை ஆராய்ச்சிக்கான ஆய்வகம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளன. மாணவர்கள் நல்லதை உருவாக்குபவர்களாக மாற வேண்டும், உங்களின் சிந்திக்கும் திறன் முழுமையையும் பயன்படுத்தி புதியவை உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புதிய தொழில்கள் வரவேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் சு.பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் இணை துணை வேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் ஏ.ரவிக்குமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் கே.குணசேகரன், டீன்கள் ஏ.சுந்தரம், டி.வி.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT