

சென்னை: சித்தூர் போலீஸாரின் சட்ட விரோத கைது நடவடிக்கை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் திரு.பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் ரா.சரவணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி வட்டம், புளியாண்டிப்பட்டி குறவர் சமூகத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவருடன் சேர்த்து உறவினர் 10 பேரை சித்தூர் போலீஸார் கடந்த ஜூன் 11-ம் தேதி அன்று சட்ட விரோதமாக கைது செய்து காவலில் சித்ரவதை செய்துள்ளனர்.
மேலும் இதில் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாக்கிஉள்ளனர். இது தொடர்பாக 2 மாநில காவல் துறையினராலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போதும் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில், சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த 6-ம் தேதி நடந்த குற்றங்கள் அனைத்தையும் மூடிமறைக்கும் வகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்படும் திட்டமாகும். இவ்விவகாரத்தில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் தமிழக அரசு மவுனமாக இருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், வன்கொடுமையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே புளியாண்டிப்பட்டி குறவர் சமூக மக்கள் பாதிக்கப்பட்ட இந்த வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு ஒப்படைத் திட தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர்.