Published : 09 Jul 2023 04:00 AM
Last Updated : 09 Jul 2023 04:00 AM
சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியவை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ரேஷன் கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணி போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் துறை ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு முகாம்கள் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பின் அமைச்சுப் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.
இந்தப் பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்துக்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக பெருநகர மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்களுக்கு கடந்த 6-ம் தேதி பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலமாக பயோ மெட்ரிக் வாயிலாக பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். அனைத்து துறை அலுவலர்களும் திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ராஜாராமன், சென்னை ஆட்சியர் மு.அருணா, கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT