Published : 09 Jul 2023 02:50 AM
Last Updated : 09 Jul 2023 02:50 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முதல் முறையாக தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சங்ககால வாழ்விடப் பகுதியாக விளங்கும் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் மூலம் கடந்த 2 மாதங்களாக இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
இதுவரையில் தலா சுமார் 15 அடி நீள, அகலத்தில் 8 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 133 செ.மீட்டர் ஆழத்தில் 6 இதழ் கொண்ட தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு குழியில் சுமார் 145-ல் இருந்து 160 செ.மீட்டர் ஆழத்தில் எலும்பு முனை கருவியும், வட்ட வடிவில், சிவப்பு நிறத்தில் கார்னீலியன் சூதுபவள மணியும் கிடைத்துள்ளது.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: 26 மில்லி கிராம் எடையுள்ள 6 இதழ் கொண்ட அணிகலன் ஒன்று கிடைத்துள்ளது. இது, மூக்குத்தி அல்லது தோடாக பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. இது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதுவரையிலான அகழாய்வில் இதுவே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணமாகும்.
இதேபோன்று, கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு முனை கருவியானது நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.மேலும், கார்னீலியன் எனும் கல்லானது குஜராத்தில் கிடைக்கக் கூடியது. கார்னீலியன் கல்லால் செய்யப்பட்ட சூதுபவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இந்த தொல்பொருட்கள் அனைத்தும் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாம்.
அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே 19 சென்டி மீட்டர் ஆழத்தில் செங்கல் கட்டுமானம் தென்பட்டது. தற்போது அனைத்துக் குழிகளிலும் இந்தக் கட்டுமானம் தெரிகிறது.
மேலும், துளையிடப்பட்ட மேற்கூரை ஓடுகளும், பல வண்ணங்களில் பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, பீங்கான் ஓடுகள் கிடைத்துள்ளன" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT