Published : 09 Jul 2023 02:50 AM
Last Updated : 09 Jul 2023 02:50 AM
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல்துறை இணை ஆணையர் சிவானந்தம் மீண்டும் பொறுப்பேற்றதை அடுத்து, அகழாய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை தங்க அணிகலன், சுடுமண் காளை உட்பட 183 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் ஏற்கனவே 8- கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்தன. இதில் கண்டறியப்பட்ட பல ஆயிரம் தொல்பொருட்கள் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்.6-ம் தேதி கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணியை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகழாய்வு பணி தொய்வாக நடந்து வந்ததால் குறைவான தொல்பொருட்களே கண்டறியப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் தொல்லியல்துறை இணை இயக்குநராக சிவானந்தம் பொறுப்பேற்றதை அடுத்து, அகழாய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன.
இதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடுமண்ணால் செய்யப்பட்ட காளை போன்ற விலங்கின உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பு ஆணிகள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டன.
மேலும் 9 குழிகளில் நான்கில் 35 செ.மீ., ஆழத்தில் களிமண், சுண்ணாம்பு கலவையால் அமைக்கப்பட்ட தரைத்தளம் கண்டறியப்பட்டன. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 செ.மீ., தடிமன் கொண்டதாக உள்ளன. மேலும் இந்த தரைத்தளத்துக்கு கீழே 2 அடி ஆழத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் குவியலாக கண்டறியப்பட்டன.
இதுதவிர துளையிடப்பட்ட பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் கெண்ட பானை ஓடுகள், பானை குறியீடுகள் கண்டறியப்பட்டன. இங்கு வெவ்வேறு நிலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. கொந்தகை அகழாய்வில் 10 மீ.க்கு 10 மீ என்ற அளவில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டு, இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT