Published : 08 Jul 2023 05:15 PM
Last Updated : 08 Jul 2023 05:15 PM
சென்னை: "வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப் படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
நியாயவிலை கடைகளில் முகாம் அமைக்கப்படும், அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், ஆதார் அட்டை,ரேஷன் அட்டை இல்லாத தகுதி வாய்ந்த மகளிரை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டிருப்பது இந்தத் திட்டத்தை ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல் முறையாக செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி மீது எழுந்த அதிருப்தியை சரி செய்யவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இந்தத் திட்டத்தை அவசரகதியில் திமுக செயல்படுத்தத் துடிப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.
அறிவிப்பது ஒன்றும், செயல்படுத்துவது வேறாகவும் இருப்பதே திமுக அரசின் பாரம்பரிய நடைமுறை என்பது இந்த விஷயத்திலும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆகவே வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT