

தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம், சோழன் மாளிகை எனும் கிராமத்தின் ஒரு மேட்டில் புதையுண்டிருந்த சப்த கன்னிகள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பட்டீஸ்வரம், தேனுபுரிஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழுள்ள கோபிநாதப்பெருமாள் கோயில் பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்திருந்தது. இந்தக் கோயிலை ரூ. இரண்டரை கோடி மதிப்பில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இக்கோயில் இடிபாடுகளுடன் இருந்ததால், இதன் எல்லையை வரையறுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று, அக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இந்தக் கோயிலின் எல்லையை வரையறையப்படுத்த, சோழன் மாளிகையிலுள்ள விவசாய சாகுபடி செய்துள்ள நிலங்களின் வழியாகச் சென்றனர். அப்போது, அங்குள்ள மேட்டில், இடிந்து தரைமட்டான நிலையிலிருந்த பழமையான கட்டிடம் இருப்பதையறிந்து, அங்குச் சென்று, அங்கு முளைத்திருந்த செடி, கொடிகளை அகற்றிப் பார்த்தபோது, மிகவும் கலைநயத்துடன் கூடிய தவ்வை, பிரம்மி, வராஹி உள்ளிட்ட சப்த கன்னிகள் சிலையும், முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள மொத்தம் 8 சிலைகள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்தச் சிலைகள் மீட்டெடுத்து, மேட்டில் வைத்தனர். இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் சிலர் அங்கு வந்து வழிபட்டனர். இந்தச் சிலைகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த இடம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால், இந்தக் கோயில் செயல் அலுவலரிடம் தகவலளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆதிகும்பேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் கூறியது, “ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இடிந்த நிலையிலுள்ள பழங்கால கட்டிடத்தில் செடி, கொடிகளுக்கிடையே சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உத்தரவின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்