

சென்னை: தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு, கடந்தாண்டு செப்.12-ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஊழல் வழக்கு தொடர்பான கோப்பும், இந்தாண்டு மே 15-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு தொடர்பான கோப்பும், தமிழக பொதுத்துறை மூலம் ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீலுக்கு சீலிடப்பட்ட உறையில் அனுப்பப்பட்டு, அதில் ஆளுநர் மாளிகையில் உள்ள பிரிவு அதிகாரி கையெழுத்திட்டு வாங்கியதற்கான ஒப்புகை ஆவணங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு உத்தரவை விரைவாக அனுப்பும்படியும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படியும் ஆளுநருக்கு ஜூலை 3-ல் கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 6-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள ராஜ்பவன் செய்திக்குறிப்பில், உண்மைக்குப் புறம்பானதகவல்கள் இருந்தன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்குக்கு இசைவு கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான வழக்கு விசாரணை கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு கடந்தாண்டு நவ.12-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் உள்ளது.
இதுதவிர, நான் ஆளுநருக்கு கடிதம் எழுதும்வரை அந்த கோப்பு குறித்து எந்த விவரமோ, விளக்கமோ கேட்டு ஆளுநரிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இவ்வளவு வேகமாக அவரை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஆளுநர், ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதிக்காமல், தற்போது ஆதாரமற்ற காரணத்தை சொல்வது ஏன்?
அதேபோல், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில், கோப்பு இந்தாண்டு மே 15-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் மாளிகையின் ஒப்புதல் கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையின் தகவல் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் விளக்கி, முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் உடனடியாக இசைவு வழங்குமாறு, ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.