தமிழகத்தில் முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,100 எம்டி, எம்எஸ் படிப்புகள் உள்ளன. அதில் 1,050 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 1,050 இடங்களில் 50 சதவீத இடங்கள் தொலைதூர கிராமப்புற மற்றும் மலை பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 525 இடங்கள் இளநிலை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்பில் 2023–24 கல்வியாண்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவோர், முதுநிலை படிப்பை முடித்தபின், 5 ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:

அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள், படிப்பை முடித்த பிறகு, தனியாகவோ, தனியார் மருத்துவமனைகள் அல்லது வெளிநாடுகளுக்கோ பணியாற்ற செல்கின்றனர். அவர்களுக்கு அரசு ஒதுக்கிய இடங்கள் மற்றும் செலவு செய்த பணம் வீணாகிறது. இவற்றை தடுக்க முதுநிலை படிப்பை முடித்தபின் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என விதி இருந்தது.

இது, இந்த ஆண்டு முதல் 5 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாற்ற விரும்பாத டிப்ளமோ முதுநிலை மாணவர்கள், ரூ.20 லட்சமும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.40 லட்சமும் செலுத்திவிட்டு தாங்கள் விரும்பும் பணிக்கு செல்லலாம். இல்லையென்றால் சான்றிதழ் வழங்கப்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in