Published : 08 Jul 2023 08:39 AM
Last Updated : 08 Jul 2023 08:39 AM

துப்பாக்கியால் சுட்டு டிஐஜி தற்கொலை: குடும்ப பிரச்சினையா அல்லது வேறு காரணமா என விசாரணை

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏடிஜிபி அருண் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர். படம் : ஜெ.மனோகரன்

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று அதிகாலை வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையா அல்லது பணிச்சுமை காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 6-ம் தேதி கோவை சரக டிஐஜியாக சி.விஜயகுமார் (47) பொறுப்பேற்றார். இவரது மனைவி கீதாவாணி. பல் மருத்துவர். இவர்களது மகள் நந்திதா. பிளஸ்-2 முடித்த இவர், மருத்துவம் படிக்க முயற்சித்து வருகிறார்.

கோவை ரேஸ்கோர்ஸ் அப்துல் ரஹீம் சாலையில் டிஐஜி அலுவலகமும், அருகில் ரெட்ஃபீல்ட் பகுதியில் முகாம் அலுவலகமும் அமைந்துள்ளன. நேற்று காலை 6.45 மணிக்கு டிஐஜி விஜயகுமார் வீட்டிலிருந்து வெளியே வந்து, தனது பாதுகாவலர் (பி.எஸ்.ஓ.) ரவியை அழைத்தார். அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

பின்னர் 6.50 மணிக்கு, தனது வலதுபக்க நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டு விஜயகுமார் தற்கொலை செய்துள்ளார். சப்தம் கேட்டு வந்த மனைவி, மகள், பாதுகாவலர் ஆகியோர், விஜயகுமார் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் அதிகாரிகள் டிஐஜி வீட்டுக்கு விரைந்தனர். கோவை ராமநாதபுரம் போலீஸார் அங்கிருந்த கைத்துப்பாக்கியை மீட்டனர். பின்னர் விஜயகுமார் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை வந்த சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அருண், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக மனஅழுத்தத்துக்கு சிகிச்சை பெற்றுவந்த விஜயகுமார், தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. எனினும், மன அழுத்தத்துக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக அல்லது பணிச்சுமையா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

10 நாட்களாக தூக்கமில்லை.. டிஐஜி விஜயகுமாருக்கு மன அழுத்தம் அதிகரித்ததால், சென்னையில் வசித்து வந்த விஜயகுமாரின் மனைவி, மகள் ஆகியோர் கோவைக்கு வந்து, அவருடன் வசித்து வந்தனர். மேலும், கடந்த சில நாட்களாக நடைப்பயிற்சிக்கு செல்வதையும் விஜயகுமார் தவிர்த்துள்ளார். கடந்த 10 நாட்களாக சரிவர தூக்கம் இல்லை என்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் சக அதிகாரி ஒருவரது குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற விஜயகுமார், நேற்று தற்கொலை செய்துகொண்டது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் அழைப்புகள் ஆய்வு: அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்த போலீஸார், விஜயகுமாரின் மனைவி, மகள் மற்றும் பாதுகாவலர் ரவியிடம் விசாரித்தனர்.

இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலா தலைமையிலான மருத்துவக் குழுவினரால், விஜயகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏடிஜிபி அருண், ஐ.ஜி. ஆர்.சுதாகர், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், எஸ்.பி.க்கள் பத்ரிநாராயணன் (கோவை), பிரபாகர் (நீலகிரி), சாமிநாதன் (திருப்பூர்), ஜவஹர் (ஈரோடு) உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது சடலம் சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x