Published : 08 Jul 2023 11:15 AM
Last Updated : 08 Jul 2023 11:15 AM

தென்மேற்கு பருவமழைக்கு நீலகிரியில் 18 வீடுகள் சேதம்: அமைச்சர் தகவல்

கூடலூரை அடுத்த அல்லூர் பழங்குடியின கிராமத்தில் மழையால் சேதமடைந்த மூங்கில் வீடு.

கூடலூர்: தென்மேற்கு பருவமழைக்கு நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். பருவமழை தொடர்பாக அரசுத் துறை அலுவலர்களுடனான பேரிடர் மேலாண்மை ஆய்வுக் கூட்டம், நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ், ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

மேலும், 6 வட்டங்களில் துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

உதகை - கூடலூர் சாலை தூக்குபாலம் பகுதியில் சீரமைப்புப் பணிகளை நேற்று
ஆய்வு செய்த சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 – 2450034, 2450035 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம். பாதிப்புள்ள இடத்துக்கு உடனடியாக சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 200 ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக்கு, நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 1 முதல் தற்போதுவரை 18 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 4 இடங்களில் மண் சரிவும், 3 இடங்களில் இதர சேதங்களும் ஏற்பட்டுள்ளன. உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அல்லூர் பழங்குடியின கிராமத்தில், மழையால் சேதமடைந்த வீட்டை சுற்றுலா துறை அமைச்சர் பார்வையிட்டார்.

ஆய்வின் போது, கோட்டாட்சியர்கள் துரைசாமி, பூஷணகுமார், முகம்மது குதுரதுல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x