Published : 08 Jul 2023 06:13 AM
Last Updated : 08 Jul 2023 06:13 AM

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் காங். போராட்டம்

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. அதில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பள்ளிப்பட்டு, பொன்னேரி, செங்குன்றம் ஆகிய இடங்களில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் சதாசிவலிங்கம், மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர்களான சிதம்பரம், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x