Published : 08 Jul 2023 06:17 AM
Last Updated : 08 Jul 2023 06:17 AM

வாக்கு வங்கியை மனதில் வைத்து பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகளுக்கு மைத்ரேயன் கண்டனம்

சென்னை: வாக்கு வங்கியை மனதில் வைத்து பொது சிவில் சட்டத்தை முதல்வர் ஸ்டாலினும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைகளும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துப் பகிர்வு, தத்தெடுப்பு போன்ற உரிமையியல் சட்டங்கள் சாதி, மத, இன, கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துப் பகிர்வு, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விவகாரங்களுக்கான பொதுவாக சட்டம்தான் பொது சிவில் சட்டம். இந்த சட்டம் குறித்து அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 73 ஆண்டுகள் கடந்தும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இது வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், இஸ்லாமியப் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதை மறந்து, முதல்வர் ஸ்டாலினும், திமுக கூட்டணிக் கட்சிகளும் வாக்குவங்கி அரசியலை மனதில் வைத்து பேசுவது கண்டனத்துக்குரியது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வருத்தம் அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக கடந்த 2003-ம் ஆண்டே குரல் கொடுத்தார். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x