Published : 08 Jul 2023 06:02 AM
Last Updated : 08 Jul 2023 06:02 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே கூடுதலாக ஒரு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி தூய பனிமய மாதாபேராலயத்தில் இந்த ஆண்டுதங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா இம்மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும்ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல லட்சம்பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, கனிமொழி எம்.பி. சார்பிலும், மாவட்ட பயணிகள் நலச்சங்கம் சார்பிலும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று சென்னை- தூத்துக்குடிக்கு ஒரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே கடந்த சில தினங்களுக்கு முன்புஅறிவித்திருந்தது. இந்த ரயிலுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் தங்கத்தேர் பவனியில் பங்கேற்கும் பக்தர்கள் திரும்பிச் செல்லும் வகையில்,சிறப்பு ரயில்அறிவிக்கப்படவில்லை. எனவே,திருவிழாவின் முக்கிய நாட்களையொட்டி கூடுதல் சிறப்பு ரயிலைஇயக்க வேண்டும் என, தூத்துக்குடிமாவட்ட பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தன.
இதனை ஏற்று சென்னை- தூத்துக்குடி இடையே கூடுதலாக ஒரு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலைதெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு10.30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து (எண் 06001) சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் ( 6-ம் தேதி) காலை 9 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு 9.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து (எண் 06002) சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகியரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஜூலை 8) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் மா.பிரம்மநாயகம் கூறும்போது, ‘‘பனிமய மாதா பேராலய திருவிழாவில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 -ஆம் தேதி சனி, ஞாயிறு தினங்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் தூத்துக்குடி- சென்னை முத்துநகர் விரைவு ரயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த சிறப்பு ரயில் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT