

இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்துக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்தான் காரணம் என்று முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வேட்டி, சேலை விநியோகம் தாமதமானது. வழக்கத்தைவிட பல மாதங்கள் தாமதமாக, மே மாதத்தில்தான் அந்தப் பணி முழுவதுமாக நிறைவடைந்தது.
வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டபோது, கைத்தறித்துறை இயக்குநராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முத்துவீரன் பொறுப்பு வகித்து வந்தார். தாமதத்துக்கு அவர்தான் காரணம் என்று கூறி முதல்வர் அலுவலகத்துக்கு அத்துறையின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவரிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
புகார் மனுவில் கூறப்பட்டிருக் கும் விவரங்கள் குறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள், ‘தி இந்து’ விடம் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த 16.10.2012 முதல் 17.11.2013 வரை கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநராக பூ.முத்துவீரன் பணியாற்றினார். 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் பேசி, டெண்டரை இருமுறை அவர் ஒத்திவைத்தார். தரம் குறைந்த நூலைக் கொடுத்ததால் இலவச வேட்டி, சேலையை குறித்த காலத்தில் தயாரிக்க முடியாமல் தாமதமானது.
இதேபோல பள்ளி மாணவர்கள் இலவச சீருடை விநியோகத்திலும் அவரது காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில் பணிபுரிந்த ஒரு பெண் அதிகாரி, விடுப்பில் போகும்நிலையை ஏற்படுத்தி, வேறு ஒருவரை அப்பணியிடத்தில் அமரவைத்து முறைகேடுகள் தொடர காரணமாக முத்துவீரன் இருந்துள்ளார். இம்மாதத்துடன் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இவ்வாறு புகாரில் கூறப் பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புகார் குறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக தற்போது பொறுப்பு வகித்து வரும் முத்துவீரனை தொடர்பு கொண்டபோது அவர் அளித்த விளக்கம்:
இதுபோன்ற புகார் அளிக்கப்பட்டிருப்பது பற்றி எனக்கு தெரியாது. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்படியே டெண்டர் கோரப்பட்டு, நூல் கொள் முதல் செய்யப்பட்டது. இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ‘40-நெ’ ரக பாவுநூல்தான் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தரமான ஆடைகளைத் தரவேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதால், முதல்முறையாக ‘60-நெ’ ரக சாயமிட்ட பருத்தி நூல் வாங்கப்பட்டது. இவற்றை ‘சீஸ் டையிங்’ என்ற முறையில் தயாரிக்க வேண்டும். அதனால் கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது. கூட்டுறவு சங்கத்தினர் முதல்முறையாக இந்த ரக நூலை கையாண்டதிலும் பிரச்சினை ஏற்பட்டது.
டெண்டரை இறுதி செய்வதற்கு தொழில்நுட்பக்குழு உள்ளது. அதில் கோ-ஆப்டெக்ஸ், கைத்தறித் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இயக்குநர் மட்டுமே முடிவெடுக்க முடியாது.
இலவச சீருடை தயாரிப்புப் பணிக்குப் பொறுப்பேற்றிருந்த பெண் அதிகாரி உடல்நலக்குறைவு காரணமாகவே விடுப்பில் போனார். எனது பணிப்பதிவேட்டில் இதுவரை கரும்புள்ளி எதுவும் கிடையாது. தேனி மாவட்டத்தில் நான் ஆட்சியராக இருந்தபோதுதான் நாட்டிலேயே முதல்முறையாக தமிழக மாவட்டம் ஒன்றுக்கு ஐஎஸ்ஓ விருது கிடைத்தது.
இவ்வாறு முத்துவீரன் கூறினார்.
இப்பிரச்சினை குறித்து, அப்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருந்த எஸ்.சுந்தரராஜை (தற்போது விளையாட்டுத் துறை அமைச்சர்) தொடர்பு கொண்டபோது ‘கருத்து எதுவும் கூற விரும்பவில்லை’ என்றார்.
‘முத்துவீரன் பதவி வகித்த காலத்தில்தான், இலவச வேட்டி, சேலை நூல் கொள்முதல் செய்யும் உரிமை, கோ-ஆப் டெக்ஸிடமிருந்து, கைத்தறி இயக்குநரகத்துக்கு போனது. டெண்டரில் ஆட்சேபம் தெரிவித்த காரணத்தாலேயே அந்த உரிமை பறிபோனது’ என கோ-ஆப்டெக்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், கைத்தறித் துறையினரோ, ‘கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தினர் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவர்களது பணிச்சுமையை குறைப்பதற்காகவே, அந்த உரிமை கைத்தறித்துறைக்கு மாற்றப்பட்டது’ என்றனர்.