

மணல் கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேச அனுமதி மறுத்ததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து, தாங்கள் கொடுத்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக உறுப்பினர் கணேஷ்குமார் ஆகியோரும் எழுந்து பேச முயன்றனர்.
அவர்களுக்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘நீங்கள் கொடுத்துள்ள பிரச்சினைகள், சம்பந்தப்பட்ட துறையின் பதிலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பதில் வந்ததும் எடுத்துக் கொள்ளப்படும்’ என்றார். இதையடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், பாமக கட்சிகளின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தது குறித்து அவர்கள் கூறியதாவது:
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க முற்படுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். சமீபத்தில்கூட தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். இது தொடர்பாக கேள்வி கேட்டால் முறையான பதில் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்த முற்பட்டோம். இது தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. 40–க்கும் மேற்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். எங்களுக்கு பேச அனுமதி மறுப்பதால் அதை ஆட்சேபித்து வெளிநடப்பு செய்தோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): மணல் கடத்தலை அரசு தடுக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். இது தொடர்பாக பேச கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து 10 நாட்கள் ஆகியும் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு, தலித் நீதிபதிகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முயன்றேன். மேலும், இலங்கையில் நடக்கும் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது என பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து பேச வாய்ப்பு கேட்டேன். பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் வெளிநடப்பு செய்தேன்.
கணேஷ்குமார் (பாமக): பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து 10 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுத்துள்ளோம். எனது தொகுதியில் மேலச்சேரி ஊராட்சியில் இருக்கும் பச்சையம்மன் கோயில் ஆடித் திருவிழாவுக்கு செல்லும் பாதை குறித்தும், மணல் கடத்தல் குறித்தும் பிரச்சினை எழுப்ப முயன்றேன். அனுமதி கிடைக்காததால் வெளிநடப்பு செய்தேன்.