தஞ்சாவூர் | திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் | திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள் பங்கேற்பு
Updated on
1 min read

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

பெரிய நாயகி அம்பாள் சமேத அருணஜடேஸ்வர சுவாமி கோயில், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். பல சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் கடந்த 2003-ஆம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் செய்ய நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிகழாண்டு ஜனவரி 18-ம் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 6 மாதங்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. 50 செப்புக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, இன்று மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் 59-யாக குண்டங்களும், 25 வேதிகைகள் அமைக்கப்பட்டு, 80 சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க அருணஜடேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கடந்த 5-ஆம் தேதி ஸ்ரீ தேரடி விநாயகர், திருவீதி விநாயகர், ஊருடையப்பர், வீரியம்மன், விஸ்வநாதர் முதலிய பரிவார கோயில்களில் மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற அருணஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், மகா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடும், காலை 9.30 மணிக்குக் கோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. விழாவில் தருமை ஆதீனம் திருக்கயிலாயப் பரம்பரை ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள், மதுரை ஆதீனம், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், நெல்லை உமையுருபாக ஆதீனம், காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகிகள் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in