155 ஆண்டு பாரம்பரியம்.. பேருந்து நிலையம்தான் இல்ல! - அவதிப்படும் ஆரணி

155 ஆண்டு பாரம்பரியம்.. பேருந்து நிலையம்தான் இல்ல! - அவதிப்படும் ஆரணி
Updated on
3 min read

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 155 ஆண்டுகள் பழமையான ஆரணி பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ளது ஆரணி பேரூராட்சி. 1868-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பேரூராட்சி, 5.89 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இந்த பேரூராட்சி பகுதியில், 8 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 5 மருத்துவமனைகள், 2 அரசு வங்கிகள், தபால் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்டவை உள்ளன.

சிவன் கோயில், பெருமாள் கோயில், 3 தேவாலயங்கள், 2 மசூதிகளும் உள்ளன. பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்கள் இதன் அருகே உள்ளது.சுமார் 155 ஆண்டுகள் பழமையான இந்த பேரூராட்சி பகுதி வழியாக நாள்தோறும் சென்னை மாநகரப் பேருந்துகள், விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஆகியவை கோயம்பேடு, ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. ஆரணியில் இருந்து ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சில பேருந்துகள் நேரடியாகவும் சென்று வருகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேரூராட்சியில் பேருந்து நிலையம் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் வாடுவது தொடர்கதையாக உள்ளது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

<strong>பிரகாஷ்</strong>
பிரகாஷ்

சமூக ஆர்வலர் பிரகாஷ்: ஆரணி பேரூராட்சி, அதை சுற்றியுள்ள மங்கலம், திருநிலை, கொசவன்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலானோர் சென்னையில் கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

அதுமட்டுமின்றி, இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர், பொன்னேரி, காரனோடை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில்படித்து வருகின்றனர். ஆரணியில் பேருந்து நிலையம் இல்லாததால், சாலையிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

<strong>அசோக்</strong>
அசோக்

இளைஞர் அசோக்: ஆரணியில் பேருந்துகளை நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லை. இதன் காரணமாக, வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளே இங்கு வந்து செல்கின்றன. இதனால், நெசவு மற்றும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் ஆரணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் தொழில் நிமித்தமாகவும், அவசர மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்னை, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆரணியில் பேருந்து நிலையம் இருந்தால், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக பேருந்துகளை இயக்க முடியும்.

<strong>ஆறுமுகம்</strong>
ஆறுமுகம்

ஆறுமுகம்: வளர்ந்து வரும் பேரூராட்சியான ஆரணியில் பேருந்து நிலையம் இல்லாததால், இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இங்கு வருவது இல்லை. இதனால், கல்லூரி மற்றும் பணியிடங்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் மாணவிகள், பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று, எம்.பி.,எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், போதிய இடம் இல்லை என்று கூறி அவர்கள் தட்டிக் கழிக்கின்றனர். இனியாவது, ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆரணி பேரூராட்சி அதிகாரி கூறியதாவது: ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க போதிய அரசு நிலம் இல்லை. இதனால், பேருந்து நிலையத்துக்காக அரசு கடந்த ஆண்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியும், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. விரைவில் ஆரணி பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க, இப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். பிறகு, பேருந்து நிலையத்துக்காக புதிய திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசு அனுமதி பெற்று, பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in