

சென்னை: கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உயிரிழப்புக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் IAS, இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார், தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார், எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
https://www.hindutamil.in/news/tamilnadu/1039878-coimbatore-dig-vijayakumar-ips-committed-suicide-by-shooting-himself.html