சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி - மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல்

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி - மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக இருப்பது பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா). இந்த திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தில் 1.43 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு 4 லட்சம் நோயாளிகள் பிரதமர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.627 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் தற்போது வரை 1 லட்சத்து 72 ஆயிரம் நோயாளிகள் பிரதமர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.238 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின்பங்கு 40 சதவீதமும் உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டமும், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டமும் இணைந்து செயல்படுகிறது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துமனைகளில், நோயாளிகளுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கவில்லையென்றால், அம்மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிதியாக மத்திய அரசு ரூ.2,145 கோடி ஒதுக்கி உள்ளது.

மத்திய அரசு தமிழக சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளது. தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் கரோனா பேரிடர் காரணமாக தொய்வடைந்தன. ஆனாலும், கட்டுமானத்துக்கான முந்தைய பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்காக ரூ.1,264 கோடி முதலில் நிதிஒதுக்கப்பட்டு, அதன் பிறகு திட்ட மதிப்பீடு மாற்றி அமைக்கப்பட்டு தற்போது ரூ.1,977 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in