

சென்னை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காததே காரணம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக ஆளுநர் வழக்கமாக செய்யும் அரசியலை தொடர்ந்துமேற்கொண்டு வருகிறார். பல்கலைக் கழகங்களின் சிண்டிகேட் கூட்டம்தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக கூறும் ஆளுநர், துணைவேந்தர்கள் கூட்டத்தை மட்டும் ராஜ்பவனில் நடத்துவது ஏன்?
நாகை மாவட்டத்தில் உள்ள மீன்வளப் பல்கலை. மாணவர்கள், ஆளுநர் மாளிகைக்கு வந்து பட்டங்களைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எனவே, சிண்டிகேட் கூட்டத்தைப் பற்றிப் பேச, தனக்கு தகுதி உள்ளதா என்று ஆளுநர் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கல்வியின் தரத்தை உயர்த்த, ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர, கல்லூரிகளில் இருந்த காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு, சட்டப்படியான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. எனினும், அந்தக் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் தரவில்லை.
துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் சட்டப்படி பல்கலை. உறுப்பினர், தமிழக அரசு உறுப்பினர், ஆளுநர் தரப்பில் ஒருவர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யுஜிசி சார்பில் ஒரு உறுப்பினரைச் சேர்க்க வேண்டுமென ஆளுநர் கூறுகிறார். அதற்கு பல்கலைக்கழக சட்டத்தில் இடமில்லை. தேர்வுக் குழுவில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக ஆளுநர் இதை வலியுறுத்துகிறார்.
தவறுகள் இருப்பின், முறையாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், தனக்கு வேண்டியவர்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. பல்கலை. விவகாரங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்கலை.களில் தவறு ஏதும் இருப்பின், அமைச்சர் அல்லது துறைச் செயலரிடம் குறைகளைத் தெரிவித்திருக்கலாம். மாறாக, பத்திரிகைகளில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், பல்கலைக்கழகங் களுக்கு எல்லாவிதமான அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. என்னநடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு ஆளுநர் பேசவேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காமல், எல்லா துறைகளிலும் ஆளுநர் தலையிடுகிறார். இவை சரியான நடைமுறையல்ல. இவ்வாறு அமைச்சர் கூறினார்.