ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சோதனை

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சோதனை
Updated on
1 min read

வேலூர்: வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில், இந்த நிறுவனம் ஒரு லட்சம் பேரிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் நிறுவனத்தின் இயக்குநர்களான லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன் மற்றும் ஏஜென்ட்டுகள் குப்புராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஐ.எப்.எஸ். இயக்குநர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது கடந்த மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் ரூ.57 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக புகார்கள் வந்ததாகவும், ரூ.12 கோடி மதிப்பிலான ஐ.எப்.எஸ் பங்குதாரர்களின் சொத்துகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காட்பாடி செங்குட்டை சி.எம்.ஜான் தெருவில் உள்ள ஜனார்த்தனனின் மாமியார் வசந்தகுமாரியின் வீடு, சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனனின் தாத்தா பக்தவச்சலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் அசநெல்லிகுப்பம் கிராமத்தில் உள்ள ஐ.எப்.எஸ் முகவர் குமாரராஜா ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் வேலப்பாடியில் உள்ள எம்.என். ஜூவல்லரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

இதுகுறித்து, உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வழக்கமாக பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் முக்கிய வழக்குகளின் விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படும். அதன்படி, ஐ.எப்.எஸ் மோசடி வழக்கு விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கை அவர்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில் கூடுதல் விவரங்களுக்காக இந்த சோதனையை நடத்தியுள்ளனர். எம்.என் ஜூவல்லரியில் அதிகப்படியான வங்கி பணப்பரிமாற்றம் குறித்து சோதனை நடத்தினர்’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in