Published : 07 Jul 2023 04:00 AM
Last Updated : 07 Jul 2023 04:00 AM
கோவை: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கு மத்திய அரசின் பொருளாதார கொள்கையே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘புதிய இந்தியாவின் எழுச்சி' என்ற தலைப்பில் கோவையில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி பயமுறுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், என்னிடம் அது நடக்காது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கு மத்திய அரசின் பொருளாதார கொள்கையே காரணம். தமிழக அரசின் பொருளாதார கொள்கை ஒரு சதவீதம் கூட காரணம் இல்லை. யாரையும் பலவீனப்படுத்தி வளர பாஜக விரும்பாது. அப்படி வளரும் வளர்ச்சி என்பது நிரந்தரம் கிடையாது.
நான் சுப்பிரணிய சுவாமியை இதுவரை பார்க்கவில்லை. இனிமேலும் பார்க்க மாட்டேன். எனக்கு எந்த காட்பாதரின் ஆசீர்வாதமும் தேவை இல்லை. ஒருவரைப்போய் பார்த்து, காலில் விழுந்து வணங்கினால்தான் என்னை ஏற்றுக்கொள்வார் என்றால், எனக்கு அதுபோன்ற ஏற்பு தேவை இல்லை. பருவமழை குறைந்துவிட்டது.
காவிரி நீர் கிடைக்கவில்லையெனில் எப்படி சாகுபடி நடக்கும்?. காவிரி நீரை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குறித்து நன்கு அறிவேன். மேகேதாட்டு விவகாரத்தில் தமிழர்களின் நலனில் கைவைத்தால் எந்த எல்லைக்கும் செல்வோம் என திமுக தெளிவாக சொல்ல வேண்டும். இவர்கள் பேச்சுவார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கே வந்தேன். அதிகார அரசியல் செய்ய வேண்டும். டெல்லி செல்ல வேண்டும், அமைச்சராக வேண்டும் என்பது எனது எண்ணமில்லை. அதற்கு தகுதியானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அமைச்சர்கள் ஆவார்கள். எனது நடைபயணத்துக்கு முன்பு திமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் கோவையில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவையின் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கோவையில் இனியாவது தொழிலதிபர்களுக்கு சுதந்திரம் கிடைக்கட்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அமைச்சர் முத்துசாமி மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் கோவையின் வளர்ச்சிக்கு பங்காற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT