Published : 07 Jul 2023 04:03 AM
Last Updated : 07 Jul 2023 04:03 AM

திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி இறந்த சம்பவம்: ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு மகளை சடலமாக பார்க்க வரும் தந்தை

சிறுமி திவ்யதர்ஷினி | தந்தை ஜெயராஜ் - கோப்புப் படங்கள்

திருப்பூர்: திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு மகளை சடலமாக பார்க்கும் நிலை தந்தைக்கு ஏற்பட்டுள்ளது, அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். குவைத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதிக்கு மகன், மகள் திவ்யதர்ஷினி (8) ஆகியோர் இருந்தனர். விஜயபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் மகள் திவ்யதர்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு தாயார் ராஜேஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். காங்கயம் சாலையில் நல்லிக்கவுண்டர்நகர் அருகே, பின்னால் வந்த நல்லூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

இந்த வாகனத்தை ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரசின்ன கண்ணன் (29) ஓட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறுமியின் சடலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக நேற்று வைக்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜேஸ்வரி சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமியின் சடலத்தை பெற குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “திவ்யதர்ஷினி 6 மாத கைக் குழந்தையாக இருந்தபோது, குடும்ப வறுமைக்காக குவைத்தில் வேலை தேடி சென்றவர்தான் அவரது தந்தை ஜெயராஜ். இன்றைக்கு ஏழரை ஆண்டுகள் கழித்து வீடு திரும்பும்போது, மகளை சடலமாக பார்க்க யாருக்கு மனம் வரும்? யாருக்கும் வரக்கூடாத நிலை இது.

இன்றைய சூழ்நிலையில், அந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்யும் வகையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றனர். விபத்து ஏற்படுத்திய வீரசின்ன முத்து மீது 3 பிரிவுகளின் கீழ் நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x