Published : 07 Jul 2023 06:07 AM
Last Updated : 07 Jul 2023 06:07 AM
சென்னை: விலங்குகள், பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம் தமிழகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: பருவநிலை மாற்றங்கள் காரணமாக நோய்த் தொற்றுகள் எளிதில் பரவும். அந்த காலகட்டங்களில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் கடத்தப்பட்டு நோய்கள் உருவாக வழிவகுக்கின்றன.
அடுத்த இரு மாதங்களில் தமிழகத்தில் பருவமழைக் காலம் தொடங்கவுள்ளது. விலங்குகள், பூச்சிகள் மூலம் பரவும் பாதிப்புகளைத் தடுக்க கண்காணிப்பை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பருவமழைக் காலத்தில் எலிக் காய்ச்சல், டெங்கு போன்ற பாதிப்புகள் அதிகமாக பரவலாம் என்பதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், வெறிநாய்க் கடி, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்க தேவையான கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், தனி நபர் சுகாதாரத்துடனும் இருந்தால் பெரும்பாலான நோய்களை தவிர்க்க முடியும். இறைச்சி உட்பட அனைத்து உணவுகளையும் சுத்தமாக்கி நன்கு வேக வைத்து உண்ண வேண்டும். இதன் மூலம் விலங்குகளில் உள்ள நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் ஊடுருவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கால்நடை பல்கலைக்கழகம்: இதற்கிடையில், மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் விலங்குவழி பரவும் நோய்கள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விழப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.
அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு ஊசி முகாம் ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார், கால்நடை கல்வி மைய இயக்குநர் சி.சவுந்திரராஜன், ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.விஜயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT