Published : 07 Jul 2023 06:14 AM
Last Updated : 07 Jul 2023 06:14 AM
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக நீர் நிலைகளை ஆய்வு செய்ய வந்த மச்சேந்திரநாதன் குழுவைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில்ஈடுபட்டு, பேரணியும் நடத்தப்பட்டது. ஏகனாபுரம் பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு, இது தொடர்பாக 215 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 2-வது விமான நிலையத்துக்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அவற்றையொட்டியுள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. பேராசியர்கள் குழு நேற்று பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள மகேதேவி மங்கலம், குணகரம்பாக்கம், நாகப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர் நிலைகளில் ஆய்வு செய்தது.
இந்தக் குழுவினருடன் டிட்கோ நிர்வாக இயக்குநர் ஜெய உள்ளிட்டோரும் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு பொதுமக்கள் சுமார் 300 பேர் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போதே இந்தக் குழுவினர் அருகாமையில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்வதாக தகவல் பரவியது.
இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். மதுரமங்கலம் நோக்கிச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 215 பேரை போலீஸார் கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவியிட்டிருப்பதாவது: ஜனநாயக முறையில் போராடிய கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். உண்மை நிலவரத்தை முதல்வர் உணர்ந்து அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, ஜனநாயக முறையில் போராடியவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT