

சென்னை: ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக தமிழகத்தைச் சேர்ந்த செல்வபிரபு திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்து தடகளப் பிரிவில் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறனுக்கு பாராட்டுகள்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி: ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக நம் தமிழகத்தின் மும்முறை நீளம் தாண்டுதல் வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். இந்த மதிப்புக்குரிய விருதைப் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 2023-ம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த செல்வபிரபு திருமாறனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். அவர் மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து, விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடித் தர எனது நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: 2023-ம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த ஜூனியர் ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வபிரபுவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழகத்தின் பிரதிநிதியாக இந்தியாவின் சார்பில் தடகள விளையாட்டுகளில் மேலும் பல சர்வதேச விருதுகளை செல்வபிரபு வென்றெடுக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.