தமிழகத்தில் 355-வது சட்டப்பிரிவை அமல்படுத்த கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் 355-வது சட்டப்பிரிவை அமல்படுத்த கோரிய வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கத் தவறியதால், மாநிலத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையாகக் கருதி தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது அதிகாரிகள் தாக்கப்பட்டனர். செந்தில் பாலாஜியைக் கைது செய்தபோது, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது.

எனவே இந்த பிரச்சினைகளை மாநிலத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையாகக் கருதி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 355 மற்றும் சட்டப்பிரிவு 352-ஐ தமிழகத்தி்ல் அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

­இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்த விஷயங்களை மாநிலத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையாகக் கருத முடியாது.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்துவது என்பது மத்திய அரசின் கடமையாக இருந்தாலும், மாநிலத்தில் ஆயுதப்புரட்சி எதுவும் நடைபெறாத சூழலில் இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த முடியாது. இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டுமெனக் கூறி நீதிமன்றமும் எந்தஉத்தரவையும் பிறப்பிக்க முடியாது’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in