Last Updated : 07 Jul, 2023 04:07 AM

 

Published : 07 Jul 2023 04:07 AM
Last Updated : 07 Jul 2023 04:07 AM

வைகை அணையில் தினமும் பிடிக்கப்படும் 2 டன் மீன்கள் - மீனவர்கள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி: காற்றின் வீச்சு அதிகரிப்பு, சாரல்போன்ற காரணங்களால் வெப்பம் குறைந்து வைகை அணை நீர்த்தேக்கத்தின் நடு மற்றும் கீழ் அடுக்குகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு மீன்கள் மேல் அடுக்குக்கு இடம் பெயர்ந்துள்ளதால் பிடிபடும் மீன்களின் அளவும் அதிகரித்துள்ளது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையில் மீன்வளத் துறை மூலம் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அணை நீரின் மேலடுக்கில் பெரும்பாலும் கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்களும், நடு அடுக்கில் ரோகு, மிருகால் உள்ளிட்ட மீன்களும் இருக்கும்.

கீழ் அடுக்கில் ஜிலேபி, கெண்டை மீன்கள் அதிக அளவில் வசிக்கும். இங்கு மீன்பிடிக்க 75 பரிசல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பரிசலுக்கு 2 பேர் வீதம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மூலம் நடைபெற்ற மீன்பிடிப்பு தற் போது தனியார் மூலம் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணைக்கான நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில் குன்னூர், பின்னத்தேவன்பட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பகுதி வரை நீர்தேங்கி இருந்தது. தற்போது மழை இல்லாததால் நீர்மட்டம் 48.95 அடியாக குறைந்துவிட்டது.

நீர்த்தேக்கப் பரப்பு குறைந்துள்ளதால் இதுவரை பரந்து விரிந்த நீரில் நீந்திய மீன்கள் குறுகிய நீருள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. மேலும் காற்று, சாரல், குறைவான வெப்பம் போன்ற காரணங்களால் நடு மற்றும் கீழ் அடுக்குகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மீன்கள் மேல் அடுக்குக்கு அதிகளவில் வந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனே மீன்களின் பிராணவாயுவாக உள்ளது. நீரை மட்டும் செவுள் வழியே வெளியேற்றி இதன் சுவாசம் நடைபெறும். காற்றில் உள்ள ஆக்சிஜன் நீரில் கரைய வெப்பம் தேவை. தற்போது குளிர்பருவ நிலை உள்ளதால் வெப்பம் கீழ் அடுக்கு வரை செல்லாது.

இதனால் அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் மேல் அடுக்குக்கு வரும். இதனால் மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன வழக்கமாக 500 கிலோ முதல் 1 டன் அளவுக்கு மீன்கள் பிடிக்கப்படும். தற்போது தினமும் 2 டன் வரை மீன்கள் பிடிபடுகின்றன என்று கூறினர்.

மீனவர்கள் கூறுகையில், வீசும் காற்றினால் தற்போது வலையை தண்ணீருக்குள் இறக்க முடியவில்லை. இருப்பினும் காரீயம் போன்றவற்றின் மூலம்அதிக எடை கொடுத்து வலையை விரிக்கிறோம். பிடிபடும் மீன்கள் காமக்காபட்டி, வைகை தெற்குக்கரை பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x