Published : 13 Jul 2014 03:20 PM
Last Updated : 13 Jul 2014 03:20 PM

இலங்கை பிரச்சினையில் காங்கிரஸை மோடி அரசு பின்பற்றக் கூடாது: ராமதாஸ்

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க மத்திய அரசு மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டை பின்பற்றக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கிறார். இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரிடம், இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையை இந்தியா ஆதரிக்குமா? என்று கேட்டபோது, "இலங்கை மீதான போர்குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதில் இந்தியா பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி, இலங்கைக்கு வல்லுனர் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பிரிவை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. எனவே, இந்த பிரச்சினையில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. இந்த விசாரணையை ஆதரிக்க மாட்டோம்" என்று பதிலளித்திருக்கிறார்.

இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பெரிசிடம் சுஷ்மா சுவராஜும் தெரிவித்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைப் பிரச்சினையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைப்பாட்டையே தங்களின் நிலைப்பாடாக வெளியுறவு அமைச்சரும், செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் முந்தைய இந்திய அரசு நடுநிலை வகித்தபோது அதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கையில் நடத்த ராஜபக்சே மறுத்துவிட்ட நிலையில், அந்த விசாரணையை சென்னையில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் இந்தியா இப்படி ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உலகின் எந்தப் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்பது தான் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் கடமையாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்தக் கடமையை இந்தியா சரியாகவே செய்திருக்கிறது. இலங்கைப் பிரச்சினையிலும் இக்கடமையை இந்திய அரசு சரியாக செய்ய வேண்டும் என்பது தான் உலகெங்கும் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகள் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகளில் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

இலங்கையில் எந்தத் தவறும் செய்யாத ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே அரசு, அதன்பின் 5 ஆண்டுகளான பிறகும் தண்டிக்கப்படவில்லை. அதேநேரத்தில் ராணுவத்தைக் குவித்து தமிழர்களை அச்சுறுத்துவது, சொத்துக்களை பறிப்பது, தமிழக மீனவர்களை கைது செய்து கொடுமைப் படுத்துவது போன்ற மனித உரிமைக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் நீதி பெற்றுத் தரும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். எனவே, இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டை புறந்தள்ளிவிட்டு, மனித உரிமையை பாதுகாக்கும் வகையிலான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்; இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x