மின்மாற்றிகளுக்கு அருகில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

குப்பைகள் அகற்றம்
குப்பைகள் அகற்றம்
Updated on
1 min read

சென்னை: மின்மாற்றிகளுக்கு அருகில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சென்னையில், கோடம்பாக்கம் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணியினை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி, கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்ய கவுடா சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய சாலைகள் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, துரைசாமி சுரங்கப் பாதையின் அருகில் உள்ள அணுகு சாலையில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய சாலை அமைக்கும் பணிக்காக, பழைய சாலையின் மேற்பரப்பு முழுவதும் அகழ்ந்தெடுக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, அணுகு சாலையில் மின்கலப் பெட்டி அருகில் இருந்த குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றிட உத்தரவிட்டார். மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற மின்கலப் பெட்டிகளின் அருகிலும், மின்மாற்றிகள் அருகிலும், முக்கியச் சந்திப்புகளிலும் உள்ள குப்பைகளை அகற்றுவதோடு, இத்தகைய இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பாந்தியன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலை பணிகள், மழைநீர் வடிகாலில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டியில் உள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் உள்ள மண் மற்றும் கழிவுகளை தூர்வாரி அகற்றும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in