

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படாததால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தும், இங்கு வரும் நோயாளிகள் பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவ மனையானது ரயில் நிலையம் செல்லும் சாலையில் நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ளது. இந்த மருத்துவமனையில், திருப்பத்தூர், கந்திலி, ஜோலார் பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாவட்ட அந்தஸ்து பெற்ற மருத்துவமனையாக இருந்தும், இங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் இந்த அரசு மருத்துவ மனையில் இல்லை என கூறப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு விபத்தில் சிக்கும் நபர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகிறது.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் இங்கு இல்லாததால், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவெடுத்து 4 ஆண்டுகள் ஆகியும், பல்வேறு வசதிகள் இன்னும் செய்யப்படாமல் உள்ளது இம்மாவட்ட மக்களை வஞ்சிப்பதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகள் இல்லாததால், இங்கு முதலுதவி சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடையாது. மேலும், பல நோய்களுக்கு தகுந்த மருத்துவர்கள் இல்லை. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்கள் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப் படுகின்றனர்.
மாவட்ட அந்தஸ்துள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என அனைவரிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப்பிரிவு, பிரசவ வார்டு, ஊசி போடும் இடம், மருந்தகம், ஆய்வகம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்தந்த துறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் நோயாளிகள் அங்கும், இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சித்தா பிரிவு, ஆயுர்வேதம் போன்ற பிரிவுகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. பல நோய்களுக்கு இங்கு மருந்துகள் வழங்கப்படுவதில்லை. மேலும், கண் மருத்துவம், சிறுநீரக பிரிவு, எலும்பு முறிவு, இருதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. பிரசவ வார்டு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு வார்டுகளில் போதிய பாதுகாப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் தாய்மார்களுக்கும், பச்சிளங் குழந்தைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
குறிப்பாக பிரசவ வார்டில் கர்ப்பிணிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் இல்லை. பல வார்டுகளில் மின்விசிறி இருந்தும் இயங்காத நிலை உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விளக்கு, சுகாதாரம் ஆகியவையும் கேள்விக் குறியாகவே உள்ளன. கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், அதைச்சுற்றியுள்ள வார்டுகளில் துர்நாற்றம் வீசுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்தி, அரசு மருத்துவமனையை தேடி வரும் நோயாளிகளை தங்களது கிளினிக்குக்கு வரவழைத்து அங்கு பணத்துக்காக சிகிச்சை அளிக்கின்றனர். திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு இங்கு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
அதற்கு முன்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை உட்பட வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள், காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறையினரிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவ மனைகளுக்கு தேவையான வசதிகள் குறித்து அரசுக்கு ஏற்கெனவே கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளுக் கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆகியவையும் கொண்டு வரப்படவுள்ளன. காலி பணியிடங்களை நிரப்பவும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும்’’ என்றனர்.