

சென்னை: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த தமிழக அமைச்சர் துரைமுருகன், காவிரியில் தமிழகத்துக்கு இந்த மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை விரைவாக திறந்துவிடும்படி வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளார்.
தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்கிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்துக்கு மாதம்தோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். அதன்படி ஜூலை மாதத்துக்கு 34 டிஎம்சி நீரை காவிரியில் திறக்க வேண்டும்.
ஆனால், கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், காவிரியில் இந்தமாதம் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடும்படி தமிழக நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, மத்திய நீர்வளத்துறை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் டெல்லி சென்றனர். டெல்லியில் நேற்று பிற்பகல் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தனர். அப்போது டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உடன் இருந்தார். சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வேண்டும், மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூன் மாதம் மற்றும் ஜூலை 3-ம் தேதி வரை 12.213 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலையில், இதுவரை 2.993 டிஎம்சி தண்ணீர்தான் வந்துள்ளது. 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்தால் காவிரி டெல்டா பயிர்கள் உலர்ந்துவிடும். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, காவிரியில் உரிய பங்கீட்டு நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்குவதை உறுதி செய்வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பாகும்.
எனவே, மத்திய அமைச்சரை சந்தித்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்தி, கர்நாடக அரசுடன் பேசி, தண்ணீரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். அவரும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து, குறிப்பாக இணை செயலரை அழைத்து காவிரி மேலாண்மை ஆணையத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நாங்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். மேகேதாட்டு தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை. நாங்கள் அந்த அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.