செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்: இன்று விசாரணை நடத்துகிறார்

செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்: இன்று விசாரணை நடத்துகிறார்
Updated on
1 min read

சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவர் இன்று விசாரணையை தொடங்குகிறார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று முன்தினம் விசாரித்தனர். ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், அவரை உடனே விடுவிக்க வேண்டும்’ என்று நீதிபதி ஜெ.நிஷாபானுவும், ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்திருப்பது சட்டரீதியாக சரியான நடைமுறைதான்’ என்று நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் 3-வது நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டுள்ளார். நீதிபதி கார்த்திகேயன் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை தொடங்குகிறார். மாறுபட்ட 2 தீர்ப்புகளில் எது சரி என்பதை, விசாரணைக்கு பிறகு அவர் உறுதி செய்வார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in