

சென்னை: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், மருத்துவக் குழு அளித்த விசாரணை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று குழந்தையின் தாய் தெரிவித்துள் ளார்.
சென்னையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தையின் தாய் அஜிஸா செய்தியாளர்களிடம் கூறியது: எனது குழந்தையின் கை அகற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவத் துறையின் விசாரணை அறிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த அறிக்கையில் கூறியிருப்பது அனைத்தும், ஏற்கெனவே அமைச்சர், மருத்துவர்கள் கூறியதற்கு நேர் எதிராக உள்ளது. எனவே, இந்த அறிக்கை எங்களுக்கு எந்த திருப்தியும் அளிக்கவில்லை.
எனது மகனுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறினர். ஆனால், எனது மகனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது மகனின் கையில் மாற்றம் ஏற்படுகிறது என்று கடந்த 29-ம் தேதி மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் நான் முறையிட்டேன். அப்போது, அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
ஆனால், அமைச்சர் மற்றும் டாக்டர்கள் அனைவரும், குழந்தையின் கையில் மாற்றம் ஏற்பட்டது சனிக்கிழமை தான் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர். அதேநேரத்தில், இப்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், குழந்தையின் கையில் மாற்றம் ஏற்பட்டது 29-ம் தேதி என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர்கள் கூறியதற்கும், இந்த அறிக்கையில் கூறியிருப்பதற்கும் முரண்பாடுகள் உள்ளன. அரசை நம்பித்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும்வரை, இதுபோன்ற தவறுகள் தொடரும்.
இனி எந்த நம்பிக்கையில், அரசு மருத்துவமனைக்கு மக்கள் வருவார்கள். என் குழந்தைக்கு நீதிவேண்டும். எனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள விவரங்களை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் எங்களிடம் கொடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளிக்க உள்ளோம்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எனது குழந்தைக்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால், அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொண்டு, அதனடிப்படையில் தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.