Published : 05 Jul 2014 10:12 AM
Last Updated : 05 Jul 2014 10:12 AM

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சோதனை ஒரு மாத காலம் நீடிக்கும்: அரசிடம் அறிக்கை அளித்த பிறகே நடவடிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விதிமீறல் தொடர்பாக சிஎம்டிஏ மேற்கொண்டு வரும் அதிரடி சோதனை ஒரு மாத காலம் நீடிக்கும் என்று தெரிகிறது. அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்த பிறகே, விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

மவுலிவாக்கம் அடுக்குமாடி விபத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் 700 புதிய கட்டிடங்கள் மற்றும் ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களை சோதனை செய்து விதிமுறை மீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தர விட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை மட்டுமின்றி சென்னை பெருநகர எல்லைப் பகுதிக்குள் வரும் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் வியாழக்கிழமை முதல் சோதனை தொடங்கப்பட்டது. இரண்டாவது நாள் சோதனை முடிவில் சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்ததாவது:

2 நாளில் 86 கட்டிடங்கள்

முதல் நாள் சோதனையில் 24 அடுக்குமாடிக் கட்டிடங்கள், 22 சிறப்புக் கட்டிடங்கள் (நான்கு மாடிக் கட்டிடங்கள்) உள்பட மொத்தம் 46 கட்டிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2-வது நாளான வெள்ளிக்கிழமையன்று பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 9 சிறப்புக் கட்டிடங்கள், 31 அடுக்குமாடிக் கட்டிடங்கள் உள்பட 40 கட்டிடங்களில் 16 குழுவினர் (ஒரு குழுவில் தலா மூவர்) சோதனை மேற்கொண்டனர். இதில், சில இடங்களில் ஒரே வளாகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தனித்தனி அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த 2 நாள் சோதனையில் 86 அடுக்குமாடிக் கட்டிடங்களில், விதிமீறல்கள் மற்றும் கட்டுமான குளறுபடிகள் தொடர்பான ஆய்வு களை அதிகாரிகள் மேற்கொண் டுள்ளனர்.

சோதனை நடைபெறும் இடங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்கள் என்பதால் நீண்ட நேரம் ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் குறைந்த எண்ணிக்கையிலான கட்டிடங்களில் மட்டுமே சோதனை செய்ய முடிகிறது. எனவே ஒரு மாத காலத்துக்கு ஆய்வு நடவடிக்கை தொடரக்கூடும். சிஎம்டிஏ-வில் உள்ள பல முக்கிய அதிகாரிகள் சோதனையில் பங்கேற்பதால், ஆய்வில் கண்டறியப்படும் குறைபாடுகளைத் தொகுக்க கால அவகாசம் தேவைப்படும். இந்த சோதனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும், அரசிடம் ஆய்வறிக்கை அளித்த பிறகே, அவற்றின் மீதான நடவடிக்கை தொடங்கும். என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x