

சேலம்: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை அடர்ந்த பனி மூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.
மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சேலம் மாவட்டம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு சேலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்று, பயிர்களுக்கு உகந்த சூழல் ஏற்பட்டதை அடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் பனி மூட்டம் நிலவியது. சூரிய உஷ்ணமின்றி, வெளிச்சமில்லாமல் பனி சூழ்ந்த ஏற்காடு மலைப் பிரதேசம் இயற்கை எழிலுடன் ரம்மியமாக காட்சி அளித்தது.
இருப்பினும், அடர் பனி மூட்டத்தால், சாலைகளில் 10 அடி தொலைவுக்கு அப்பால் உள்ளதைக் கூட காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர். ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, பேருந்து நிலையம், ஜரினா காடு, மஞ்சக் குட்டை, செம்ம நத்தம் உள்ளிட்ட பகுதிகளை பனி மூடியதால், பொதுமக்கள் வெளியிடங்களில் நடமாட முடியாத நிலை உருவானது.
மேலும், ஏற்காடுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் இருந்து வெளியே சென்று காட்சி முனைகளை காண முடியாத அளவுக்கு பனிப் பொழிவு இருந்தது. கடும் குளிர் வாட்டியதால், சுற்றுலாப் பயணிகளும், ஏற்காடுவாசிகளும் வீடுகளில் முடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சேலம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது.