

சென்னை: சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது. அவர்கள் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை உயர்த்தினால் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள்தான்.
பலனடையப்போவது ‘ரெட்ஜெயன்ட் மூவிஸ்’ போன்ற நிறுவனங்கள்தான். தமிழகத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகம் என இருக்கும் நிலையில், திட்டமிட்ட ரீதியில் இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அப்படி உண்மையிலேயே திரை அரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், 2017-ல் ரூ.120-க்குவிற்று கொண்டிருந்த ஒரு டிக்கெட், ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் 99 ரூபாயாக விலை குறைந்த நிலையில், 10% உள்ளாட்சி வரியை விதித்து ரூ.130 ஆக உயர்த்தி மக்களுக்கு பெரும் சுமையை ஏற்றியபோது திமுக வாய்மூடி மவுனமாக இருந்தது ஏன்?
எனவே, இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாது. தேவையெனில், உள்ளாட்சி வரியை ரத்து செய்து அந்த கட்டணத்தை திரை அரங்குகள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும். பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.