

சென்னை: பெங்களூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கிறார். 78 வயதாகும் அவர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக பெங்களூரு வந்தபோது, சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு துறை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், அவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை ஒன்றே தீர்வு என்பதை கண்டறிந்தனர்.
மருத்துவமனையின் இதயம், நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறை தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான கே.ஆர்.பாலகிருஷ்ணன், துணை தலைவரும், இதய நல மருத்துவ நிபுணருமான கே.ஜி.சுரேஷ் ராவ், மருத்துவ இயக்குநர் அபர் ஜிண்டால் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த முதியவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.
மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட நுரையீரலை அவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர். 78 வயது முதியவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பது ஆசியாவிலேயே முதல்முறை என்று மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் மணியன் தெரிவித்தார்.