

சென்னை: தமிழகத்தின் அடையாளமாக திகழும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினந்தோறும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையைத்தை ஒட்டி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம், மூர்மார்க்கெட் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மாநகராட்சி, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த வளாகங்களை ஒருசேர இணைப்பதற்காகவும், மக்கள் எளிதில் பாதுகாப்பாக சாலையை கடக்கவும் சுரங்கப்பாதையும், மெட்ரோ ரயில் வழிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொருஇடத்துக்கு சுலபமாக செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல சுரங்கப் பாதை வழியாக 2 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தானியங்கி படிக்கட்டுடன், லிப்ட் வசதிகளும் இடம் பெற்றுள்ளன. அதேபோல் மெட்ரோ சுரங்கப்பாதை மூலமாக 3 இடங்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், பூங்கா ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சிக்கும் இதேபோல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், பெரும்பாலான பாதசாரிகள் சுரங்கப் பாதையை பயன்படுத்துவதில்லை. இதற்கு பதிலாக சாலையின் குறுக்காகவே நடந்து செல்கின்றனர். இதனால் பூந்தமல்லி சாலையில் எழும்பூரில் இருந்துகோட்டை ரயில் நிலைய சிக்னல் வரைபோக்குவரத்து தடைப்படுகிறது. இவற்றைகட்டுப்படுத்த போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கும்பலாக சாலையை கடக்கும் பாதசாரிகளை தடுக்க முடிவதில்லை. இதுதொடர்பாக அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தரப்பில் பல்வேறுகருத்துகள் வரப்பெற்றுள்ளன.
வங்கி ஊழியர் சதீஷ்: திடீரென ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் கும்பலாக சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை மறிப்பதால் சில சமயம் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உருவாகிறது.
ஆட்டோ ஓட்டுநர் மாறன்: ரயில் நிலையத்துக்கு புதிதாக வரும் பயணிகள், சுரங்கப் பாதையை பயன்படுத்தாமல் பெரும்பாலும் சாலையின் குறுக்கே கும்பலாகவே கடந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கெனவே பழக்கப்பட்டவர்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி சாலையை கடக்கின்றனர். மேலும், சிலர் சுரங்கப்பாதை தூரமாக இருக்கும் எனக் கருதியும் சாலையிலே செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுகுறித்து பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் சம்பத்பாலன் கூறியதாவது: வெளிமாநிலத்தவர்களும், மருத்துவமனைக்கு அவசரமாக வருபவர்களும் தான் அதிகளவில் சாலையின் குறுக்கே விதிகளை மீறி கடந்து செல்கின்றனர். அவர்களுக்கு சுரங்கப் பாதைகள் குறித்து தெரிவதில்லை.
ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் இருந்தும், மொழி தெரியாததால் பலர் இதுபோல் கும்பலாக கடக்கின்றனர். இதை தடுக்கும் விதமாக போலீஸார் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்பு செய்தும் வருகின்றனர். குறிப்பாக பல்லவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பிராட்வே நோக்கி திரும்புகையில் பொதுமக்கள் இவ்வாறு சாலையின் குறுக்கே கடக்கின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்த பல்லவன் சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வாகனங்களை சுரங்கப்பாதை வழியாக செல்லும் புதிய திட்டத்தை செயல்படுத்த ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) பரிசீலனை செய்து வருகிறது. அதேபோல் விக்டோரியா ஹாலில் இருந்துபெரியமேடு சாலை வரையும் சுரங்கப்பாதை வழியாக வாகனங்களை திருப்பிவிடவும் ஆலோசித்து வருகிறோம்.
இவை நடைமுறைக்கு வந்தால் சென்ட்ரல் சிக்னலில் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும். அதேபோல் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சுரங்கப்பாதை வசதிகளை உபயோகப்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.