விளிஞ்சியம்பாக்கம் ஏரியை விழுங்கிய ஆக்கிரமிப்புகள்: நிர்மூலமான நீர்நிலை மீட்கப்படுமா?

வறண்டு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரி.
வறண்டு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரி.
Updated on
1 min read

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான விளிஞ்சியம்பாக்கம் ஏரி. இந்த ஏரி பருவ மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும்.

இந்த ஏரி தண்ணீரை நம்பி சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. நாளாடைவில் விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறின. ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் வரத் தொடங்கின.

இதனால், ஆக்கிரமிப்பாளர்களால் ஏரி பாதியாகச் சுருங்கி விட்டது. தற்போது 60 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி உள்ளதாக பொதுப்பணித் துறை கோப்புகளில் உள்ளது.

கவரப்பாளையத்தில் உள்ள கோவிந்தன் தாங்கல் ஏரியின் உபரி நீர் கால்வாய் வழியாக, விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்குச் செல்லும்.அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பருத்திப்பட்டு ஏரிக்குச் செல்லும். இப்படி இணைப்புஏரிகள் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த இணைப்புக் கால்வாய்களும் காணாமல் போய்விட்டன.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: ஆவடி நகரின் முக்கிய நீர் ஆதாரமான பருத்திப்பட்டு ஏரியை தமிழக அரசுவீட்டுவசதி வாரியம் குடியிருப்பு மனைகளாக மாற்றிவிட்டது. இதனால், ஆவடி மக்களுக்கு ஒரே நீர் ஆதாரமாக விளிஞ்சியம்பாக்கம் ஏரி இருக்கிறது. ஆனால், இந்த ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.

மேலும், விளிஞ்சியம்பாக்கம் ஏரி தூர் வாரி பல ஆண்டுகளாக ஆகிறது. அத்துடன், ஏரியின் கரைகளும் சீரமைக்கப்படாமல் பல இடங்களில் உடைந்து உள்ளன.

இதனால், மழை பெய்தால் தண்ணீரைதேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.வரத்துக் கால்வாய்களும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், நீர் ஏரிக்கு வருவதும் குறைந்து விட்டது.

அத்துடன், ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்கள், மழைக் காலங்களில் தங்கள் வீடுகளில் மழை நீர் புகுவதைத் தடுப்பதற்காக ஏரியின் கரைகளை உடைத்து விடுகின்றனர். இதனால், மழை நீர் ஏரியில் தேக்கி வைக்க முடியாமல் வீணாக வெளியேற்றப்படுகிறது.

ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு,ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்வளத் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் 4 வார காலத்துக்குள் அகற்றப்படும் என தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அதேபோல், பருத்திப்பட்டு ஏரியை பசுமைப்பூங்காவாக உருவாக்கி ஒரு சுற்றுலா தலமாக மாற்றியதைப்போல், விளிஞ்சியம்பாக்கம் ஏரியையும் சீரமைத்து சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, ஏரியின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் ஏரியை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in