

மதுரையில் அதிமுக நிர்வாகி பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கரும்பாலையைச் சேர்ந்த வாசிமலை மகன் சரவணக்குமார் (30). பெயிண்டரான இவரை கடந்த ஜனவரி 22ம் தேதி கரும்பாலை ஆட்டோ நிறுத்தம் அருகே சிலர் கொலை செய்தனர். இதுபற்றி அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக 43-வது வட்ட துணைச் செயலாளரான ஜெயபாண்டியின் மகன் பிரகாஷ் பாண்டியன் (19) உள்பட 6 பேரைக் கைது செய்தனர். அப்போதே இக்கொலை வழக்கில் ஜெயபாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக சரவணக்குமார் உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் மதுரை சட்டக்கல்லூரி சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஜெயபாண்டி சென்று கொண்டிருந்தார். மாநகராட்சி நீச்சல்குளம் அருகே அவரை 20 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயேஅவர் பலியானார்.
இதையறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா அங்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததால் அவர்கள் சமாதானம் அடைந்தனர். அதன்பின் ஜெயபாண்டி உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதுபற்றி அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விசாரணையில் சரவணக்குமாரின் கொலைக்கு பழிவாங்கவே இக்கொலை நடந்திருப்பதைக் கண்டறிந்தனர்.இதுதொடர்பாக கரும்பாலையைச் சேர்ந்த வடிவேல், வாசிமாலை, வேல்முருகன், சுரேஷ், சீதாராமன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். 15க்கும் மேற்பட்டவர்களைத் தேடி வருகின்றனர்.