Published : 06 Jul 2023 04:10 AM
Last Updated : 06 Jul 2023 04:10 AM
விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், சிறிய படகுகளில் மீனவர்கள் தினம் தோறும் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
மாறுபட்ட நீரோட்டம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது இப்பகுதியில் பல படகுகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் வசவன் குப்பம் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க கடந்த ஆண்டு முதற்கட்ட பணி தொடங்கியது.
இந்த இடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். சுற்று சூழலும் பாதிக்கும் என சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மரக்காணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை குப்பம் மீனவர்பகுதியில் உள்ள மதியழகன் என்பவரது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் மர்மமான முறையில் எரிந்தது. இதில் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மீன்பிடித் துறைமுகம், படகுதளம் இல்லாததால் தான் இவ்வாறு நடப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே ஒவ்வொரு ஆண் டும் ஏராளமான விசைப் படகுகள், பைபர் படகுகள் கடலில் மூழ்கி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மரக்காணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அனுமந்தை குப்பம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் சமரசம்: இத்தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், கோட்டக்குப்பம் காவல் துணை கண் காணிப்பாளர் சுனில், கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், சாலை மறி யலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மீனவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT