ராமநாதபுரம் வாரச்சந்தை கட்டிடம் பூட்டப்பட்டதால் வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் மறியல்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாரச்சந்தை கட்டிடம் பூட்டப்பட்டதால், புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரி கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை ரூ.20 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாக பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள வாரச் சந்தை கட்டிடம் இடிக்கப் பட்டு, கடந்த வாரம் முதல் பூட்டப்பட்டது. வாரந்தோறும் புதன் கிழமை இங்கு வாரச்சந்தை நடைபெறும்.
கடந்த வாரம் திடீரென வாரச்சந்தை கட்டிடம் பூட்டப் பட்டதால் வியாபாரிகள் சுற்றிலும் உள்ள சாலைகளில் கடைகளை அமைத்தனர். இந்நிலையில் நேற்று கடை போட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாரச்சந்தை வியாபாரிகள் சந்தைக் கட்டிடம் பூட்டப்பட்டதால், நேற்று காலை புதிய பேருந்து நிலையத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்து நிலையத் துக்குள் பேருந்துகள் வந்து செல்ல முடியவில்லை. அதனையடுத்து ராமநாதபுரம் டி.எஸ்.பி ராஜா, கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் ஆகியோர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் அங்கு வந்த நகராட்சித் தலைவர் கார் மேகம், பேருந்து நிலைய விாிவாக்கப் பணிக்காக வாரச் சந்தை கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. அதனால் வாரச்சந்தை நடத்த முடியாது என்றார்.
இருந்தபோதும் கடைகள் அமைக்க இந்த வாரம் திறந்து விடுங்கள், அடுத்த வாரத்துக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யுங்கள் என டி.எஸ்.பி ராஜா நகராட்சித் தலைவரிடம் தெரிவித்தார். அதனையடுத்து வாரச் சந்தை கட்டிடம் திறந்து விடப்பட்டதால் வியா பாரிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அதன் பின் வியாபாரிகள் அங்கு கடைகளை அமைத்தனர். இப்போராட்டத்தால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
