முதல்வரை முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்: அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்

முதல்வரை முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்: அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்
Updated on
1 min read

திருச்சி: பெங்களூரூ சென்றால் திரும்பி வரும்போது தமிழக முதல்வரை முற்றுகையிடப் போவதாக கூறும் அண்ணாமலை, முடிந்தால் அதை செய்யட்டும் பார்க்கலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

திருச்சி மாநகர(மேற்கு) மத்திய மாவட்டம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கிராப்பட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.

விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது: கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் அரசியல் சட்டத்தைக் குலைப்பதற்கு சில சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அடுத்து யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதற்காக 17 கட்சித்தலைவர்களை தமிழக முதல்வர் ஓரிடத்தில் அழைத்து விவாதித்துள்ளார்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதமர், திமுகவை தொட்டுப் பார்க்கலாம் என நினைக்கிறார். திமுக தொண்டர்களை பழைய திமுககாரர்களாக மாற்றி விடாதீர்கள். தமிழக முதல்வர் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்குச் சென்றால், அவர் திரும்பி வரும் போது அவரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அண்ணாமலை சவால் விட்டுள்ளார்.

அவருக்கு தைரியம், துணிச்சல் இருந்தால், அவர் வரும்போது தடுத்துப் பார்க்கட்டும் பார்க்கலாம். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறை வரம்புமீறி நடந்து கொண்டது. நல்லவேளையாக அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்து வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இல்லையெனில் திகாரில் அடைத்து, அவரது உயிரையும் எடுத்திருப்பார்கள். தனக்கு வேண்டாதவர்களை வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் பிரதமர் மோடி பழிவாங்கி வருகிறார். நாட்டில் என்னநடைபெறுகிறது என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாநகர மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in